மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
இந்தூரில் நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில்லின் அபார சதங்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதம் ஆகியவற்றின் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் பந்து வீசிய இந்திய அணியின் பவுலர்கள் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை 295 ரன்களுக்கு முடக்கியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்கூரும், தொடர் நாயகனாக ஷுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடம்
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை ஒயிட்வாஷ் செய்த பிறகு, ஐசிசி ஆடவர் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்தை கடைசி போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், இந்திய அணி, தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரண்டையும் முந்திக்கொண்டு 114 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன், ஒரே வாரத்தில் முதலிடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு தரவரிசையில் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.