சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடியது ஏன்? இது தான் காரணம்
வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சக வீரர் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடினார். முன்னதாக, போட்டி தொடங்கும் முன் தனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியை அணிந்து போட்டோஷூட்டில் சூர்யகுமார் யாதவ் ஈடுபட்டுள்ளார். எனினும், அப்போது ஜெர்சியை அணிவதில் அசௌகரியத்தை உணர்ந்ததால், அது குறித்து அணி நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு பெரிய ஜெர்சியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் அவருக்கு ஏற்ற ஜெர்சி இரண்டாவது போட்டி முடிந்த பின்பு தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதியால் சஞ்சு சாம்சனின் பெயரை மறைக்காத சூர்யகுமார் யாதவ்
தன்னுடைய ஜெர்சி அணிய முடியாத நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனில் இடம் பெறாத சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து போட்டியில் விளையாடினார். ஆனால் சுவாரஸ்யமாக ஜெர்சியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இதற்கு காரணம் ஐசிசி சட்டத்தின்படி, வீரர்கள் தங்கள் ஜெர்சியின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட பெயர்களை மறைக்கக் கூடாது என்ற விதிதான். மேலும், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போதும், தன்னுடைய புதிய ஜெர்சி கிடைக்காது என்பதால், அப்போதும் விளையாடும் லெவனில் இடம் பிடித்தால் வேறு ஒரு வீரரின் ஜெர்சியை தான் அணிந்து விளையாட வேண்டி இருக்கும். இதற்கிடையே, முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், குடாகேஷ் மோட்டியின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.