டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : கோலியின் சாதனையை முறியடித்த முகமது ஷமி!
இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சனிக்கிழமை (பிப்ரவரி 11) களமிறங்கிய முகமது ஷமி அதிரடியாக ஆடி 37 ரன்கள் குவித்து அவுட்டானார். இதில் மூன்று சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 சிக்சர்களை அடித்து, விராட் கோலியின் 24 டெஸ்ட் சிக்சர்கள் சாதனையை முறியடித்துள்ளார். முகமது ஷமி தற்போது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், 101 டெஸ்ட் போட்டிகளில் 107 சிக்சர்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் வீரேந்திர சேவாக் ஆவார். அவர் 104 போட்டிகளில் 91 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும் வீரேந்திர சேவாக், உலக அளவில் அதிக சிக்சர்கள் அடித்த டெஸ்ட் வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 374 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் அனைத்து வடித்து கிரிக்கெட்டிலும் சேர்த்து 243 சிக்சர்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.