IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை
இந்தூரில் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும், ஷுப்மன் கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், டோட் மர்பி ஒரு விக்கேட்டையும், நாதன் லியோன் 3 விக்கெட்டையும் எடுத்தனர்.
மேத்யூ குஹ்னெமனின் முதல் ஐந்து விக்கெட்
மேத்யூ குஹ்னெமன் தனது முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் அடுத்தடுத்து ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வினை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் தனது முதல் ஐந்து விக்கெட்டை இந்த போட்டியில் பெற்றுள்ளார். இவர் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தான் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா ஜடேஜாவின் சுழலில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 156 ரன்கள் சேர்த்து 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.