ரூ. 1,560 கோடி தப்பியது! இந்தியாவுடன் விளையாட சம்மதித்த பாகிஸ்தான்; நிம்மதி பெருமூச்சு விடும் ஐசிசி
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த திடீர் மனமாற்றத்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சந்திக்கவிருந்த சுமார் 174 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,560 கோடி) நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்திருந்தால், ஒளிபரப்பு உரிமம்(Broadcasting Rights), விளம்பர ஒப்பந்தங்கள் (Sponsorships) மற்றும் டிக்கெட் விற்பனை ஆகியவற்றில் ஐசிசி-க்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். உலகளவில் அதிக வருவாய் ஈட்டி தரும் இந்த போட்டி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதால், ஐசிசி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
U டர்ன்
'புறக்கணிப்பு' முடிவில் திடீர் மாற்றம்
வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதலில் அறிவித்திருந்தார். இருப்பினும், திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. அதன்படி, இந்தியாவுக்குச் செல்ல மறுத்த வங்கதேசத்திற்கு எந்தவித நிதி அபராதமும் விதிக்கப்படாது என ஐசிசி உறுதியளித்துள்ளது. அதோடு, 2028 முதல் 2031-க்குள் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பு வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளின் வேண்டுகோளையும், கிரிக்கெட் விளையாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.