LOADING...
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?
அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC

பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
02:23 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. பாகிஸ்தான் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தையே முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஐசிசி பரிசீலித்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. அவை எப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்படக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவை பற்றி ஒரு பார்வை:

தடை

பாகிஸ்தான் அணி மீது எதிர்பார்க்கப்படும் தடைகள்

நிதி முடக்கம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிதும் நம்பியிருக்கும் ஐசிசி-யின் வருடாந்திர நிதிப் பங்கீட்டில் (சுமார் ₹280 கோடிக்கும் மேல்) பெரும் வெட்டு விழும். ஒளிபரப்பு இழப்பீடு: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாவதால் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டத்தைப் பாகிஸ்தான் வாரியமே ஈடுகட்ட வேண்டும் என ஐசிசி உத்தரவிடலாம். சர்வதேசத் தனிமைப்படுத்தல்: ஆசிய கோப்பை மற்றும் அனைத்து இருதரப்புத் தொடர்களிலிருந்தும் பாகிஸ்தான் அணி இடைநீக்கம் செய்யப்படலாம். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், PCB தலைவர் மோசின் நக்வி இது குறித்து இன்னும் மௌனம் காத்து வருகிறார்.

வரலாறு

வரலாற்று பாடம்

கடந்த காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் போட்டிகளைத் தவிர்த்துள்ளன. ஆனால், உலகக்கோப்பை தொடரின் கடைசி நேரத்தில், அதுவும் இந்தியா-பாகிஸ்தான் போன்ற உயர்மதிப்புடைய போட்டியை புறக்கணிப்பது இதுவே முதல்முறை. இதனால் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் (NRR) கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்கள் தொடரிலிருந்து வெளியேறும் நிலையும் உருவாகும். பாகிஸ்தானின் இந்த பிடிவாதம் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அந்நாட்டு வாரியத்திற்கு பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவையும் ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement