உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?
இந்தூரில் படுதோல்வியடைந்த இந்திய அணி அகமதாபாத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோற்றால் அல்லது போட்டி டிராவில் முடிந்தால், இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு இலங்கை-நியூசிலாந்து தொடரின் முடிவைப் பொறுத்து அமையும். முன்னதாக இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஏற்கனவே ஜூன் 7-11 வரை ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 68.52 சதவீத புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.
நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறாவிட்டால் என்னாகும்?
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறாவிட்டால் இலங்கை நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வெல்ல வேண்டும். ஆனால் போட்டி நியூசிலாந்தில் நடக்க உள்ளதால் அதை வெல்வது மிகவும் கடினமாகும். ஆனால் இலங்கை ஒரு ஆட்டத்தை டிரா செய்து, 1-0 என வென்றால், இந்திய அணியை விட பின்தங்கியே இருக்கும். இதன் மூலம் இந்திய அணி தானாக இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறிவிடும். ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல், அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.