முறையான பயிற்சியாளர் இல்லாதது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் : கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இருப்பதைப் போல் முறையான பயிற்சியாளர் இல்லாதது தான், மிகவும் முக்கியமான கட்டங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அணி சொதப்புவதற்கு காரணம் என்ற விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளது. இந்திய மகளிர் அணிக்கு இந்த மனவேதனை புதிதல்ல. 2017 இல் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கி அனைத்து ஐசிசி தொடர்களிலும் நாக் அவுட் சுற்றில் தோல்வியைத் தழுவுகின்றனர். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இது தான் நடந்தது. இப்போதும் மகளிர்டி20 உலகக்கோப்பையில் அதுவே நடந்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங், தவறவிடப்பட்ட கேட்ச்கள் உள்ளிட்ட பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்திய மகளிர் அணியில் உள்ள பிரச்சினைகள்
இந்திய அணி முக்கியமான தருணங்களில் தோல்வியைத் தழுவ காரணம், பிசிசிஐ முழுநேர பயிற்சியாளரை முறையாக வழங்காதது தான் எனக் கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021 முதல் மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றப்பட்டார். மகளிர் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் ஏ அணிகளை கையாண்டு வந்த ஹிருஷிகேஷ் கனிட்கர், கடைசி நேரத்தில் டி20 உலகக்கோப்பைக்கான அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். வீராங்கனைகள் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களை சரியாக வழிநடத்த ஆடவர் அணிக்கு இருப்பது போல் சரியான நியமித்தால் தான், ஐசிசி போட்டிகளில் மகளிர் அணி கோப்பையை வெல்ல முடியும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.