விராட் கோலி 110 சதங்கள் அடிப்பார் : பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சார் சோயிப் அக்தர் ஆருடம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய வீரர் விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 110 சர்வதேச சதங்களை அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, 1,205 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, விராட் கோலி சமீபத்தில் ஒரு டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் நான்காவது நாளில் தனது 28வது டெஸ்ட் சதத்தை கோலி பதிவு செய்தார். இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திற்கு எதிராக நவம்பர் 2019 இல் சதமடித்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் சதங்கள்
கோலி தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து சர்வதேச அளவில் மொத்தம் 75 சதங்களை வைத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், கோலியிடமிருந்து தற்போது கேப்டன் சுமை நீக்கப்பட்டதால், அவர் தனது கிரிக்கெட் கேரியர் முடிவதற்குள் 100 சதத்தை கடப்பார் என்று அக்தர் கூறியுள்ளார். மேலும், கோலி சச்சினின் சாதனையை முறியடித்து 110 சதங்கள் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக்தர் மேலும் தனது சர்வதேச வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தியது தான் தனது சிறந்த விக்கெட் என்று கூறியுள்ளார்.