
ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்கச் செய்ததால், பவர்பிளேயைப் பயன்படுத்த முடியாமல் தவித்தது.
கேப்டன் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை மீட்டெடுக்க முயன்றார். ஆனால் இங்கிலாந்து 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அபிஷேக் சர்மாவின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியாவின் துரத்தல் வேகமாக இருந்தது, வெறும் 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஹாரி புரூக்
இங்கிலாந்து துணைக் கேப்டன் ஹாரி புரூக் கருத்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஹாரி புரூக், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பந்துகளைக் கணிப்பதில் சிரமம் ஏற்பட்டதே அவர்களின் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்று கூறினார்.
அதே நேரம் ஹாரி புரூக், வருண் சக்ரவர்த்தியின் திறமையை ஒப்புக்கொண்டார், அவருடைய துல்லியம் மற்றும் மாறுபாடுகள் குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைத்தன என்று கூறினார்.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிலாமி (ஜனவரி 25) நடைபெற உள்ள இரண்டாவது டி20 இல் பனிமூட்டம் இல்லாமல் தெளிவான நிலைமைகள் இருக்கும் என்று புரூக் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் அடுத்த இந்தியா vs இங்கிலாந்து மோதலுக்கு அணிகள் தயாராகி வரும் நிலையில், இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.