மகளிர் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள்! புதிய சாதனை படைக்க தயாராகும் ஹர்மன்பிரீத் கவுர்!
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை பூர்த்தி செய்யும் முனைப்புடன் உள்ளார். 3,000 ரன்கள் மைல்கல்லை அடைய ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 60 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் வரவிருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் அவர் சாதனையை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைல்கல்லை எட்டினால், இதை செய்யும் நான்காவது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் பெறுவார். மகளிர் டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்ப்ரீத்தின் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
ஹர்மன்ப்ரீத் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து இந்தியாவின் முன்னணி பேட்டர்களில் ஒருவராக உள்ளார். மகளிர் டி20களில் அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக உள்ளார். ஹர்மன்ப்ரீத் 2009இல் டவுண்டனில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். 146 டி20 போட்டிகளில் 2,940 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அடங்கும். ஹர்மன்ப்ரீத் கேப்டனாக மகளிர் டி20இல் அதிக ரன்களை எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். அவர் 91 போட்டிகளில் 2,010 ரன்கள் எடுத்துள்ளார். டிசம்பர் 2022 இல், ஹர்மன்ப்ரீத் மகளிர் டி20களில் கேப்டனாக தனது 50வது வெற்றியைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் அவர் இந்தியாவில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.