ரஞ்சி கோப்பை 2022-23 : எலும்பு முறிவால் பாதியிலேயே வெளியேறினார் ஹனுமா விஹாரி!
இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக நடந்து வரும் ரஞ்சி டிராபி 2022-23 கால் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆந்திர கேப்டன் ஹனுமா விஹாரிக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விஹாரி 16 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அவேஷ் கானின் பவுன்சரில் காயம் அடைந்தார். விஹாரி தனது பேட்டை கொண்டு கையை இரண்டு முறை சுழற்றினார். ஆனால் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதை அடுத்து ரிட்டையர் ஹர்ட் கொடுத்து வெளியேறினார். ஸ்போர்ட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஹனுமா விஹாரி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்ததில் அவரது இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹனுமா விஹாரியின் ரெட் பால் கிரிக்கெட் பெர்ஃபார்மன்ஸ்
விஹாரி 2018 இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து 16 டெஸ்டில் 33.56 சராசரியுடன் 839 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒரு சதம் (வெஸ்ட் இண்டீஸ் எதிராக 111 ரன்கள்) மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் கடைசியாக ஜூலை 2022 இல் இங்கிலாந்துக்கு எதிராக மாற்றியமைக்கப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடினார். இதற்கிடையில், விஹாரி 113 முதல் தர போட்டிகளில் 8,574 ரன்களை குவித்துள்ளார். இதில் 23 சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கும். தற்போதையை ரஞ்சி டிராபியில் விஹாரி 40.00க்கு கீழான சராசரியுடன் 464 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில், அவர் இதுவரை இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.