Loading...
ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள்! 5000 மீட்டரில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்
5000 மீ ஓட்டத்தில் குல்வீர் சிங் வெண்கலம் வென்றார்

ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள்! 5000 மீட்டரில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
07:46 am

செய்தி முன்னோட்டம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் 13 நிமிடம் 24.95 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே, ஒரே பதிப்பில் இரு தடகள பதக்கங்களை (10,000 மீட்டரில் வெள்ளி, 5000 மீட்டரில் வெண்கலம்) வென்ற முதல் இந்தியத் தடகள வீரர் என்ற பெருமையை 28 வயதான குல்வீர் சிங் பெற்றுள்ளார்.

பரபரப்பான போட்டி

கென்ய வீரரை வீழ்த்திய பரபரப்பான தருணம்

போட்டியின் கடைசி சுற்று வரை முன்னணியில் இருந்த வீரர்களுடனேயே ஓடிவந்த குல்வீர் சிங், கடைசி சில மீட்டர்களில் தனது முழ ஆற்றலையும் வெளிப்படுத்தினார்.

இறுதியில் கென்யாவின் முன்னணி வீரரான கொர்னேலியஸ் கெம்போயை விட வெறும் 0.04 வினாடிகள் முன்னிலையில் வந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இப்போட்டியில் கென்யாவின் மேத்யூ கிப்சாங் (13:23.61) தங்கப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் (13:24.70) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

தேசிய சாதனையாளரான குல்வீர் சிங் ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கங்கள்

ட்ரிபிள் ஜம்ப் மற்றும் பாரா தடகளத்தில் பதக்கங்கள்

தடகளப் போட்டியின் கடைசி நாளில் இந்தியாவிற்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரவீன் சித்ரவேல் (16.58 மீ) வெள்ளிப் பதக்கத்தையும், செல்வா பிரபு திருமாறன் (16.52 மீ) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

அதேபோல பாரா தடகளப் பிரிவில், ஆண்களுக்கான F57 குண்டு எறிதல் போட்டியில் சோமன் ராணா (13.40 மீ) தங்கப் பதக்கமும், சுபம் ஜூயல் (13.28 மீ) வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.

ADVERTISEMENT

தடகளம்

தடகளத்தில் இந்தியாவின் 2வது சிறந்த செயல்பாடு

இத்தொடரில் இந்தியா மாற்றுத்திறனாளி அல்லாதோர் தடகளப் பிரிவில் தங்கப் பதக்கம் எதையும் வெல்லாவிட்டாலும், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன் 2010 புதுடெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை வென்றதே முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, 2026 கிளாஸ்கோ தொடர் காமன்வெல்த் தடகள வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த பதக்க வேட்டையாக அமைந்தது.

ADVERTISEMENT