2007-ல் அறிமுகம்...2026-ல் தூதர்! டி20 உலகக்கோப்பையின் அடையாளமாக மாறிய ரோஹித் சர்மா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான தூதராக இந்திய அணியின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பார்படாஸில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்ற கையோடு, டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு, இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தனது டி20 உலக கோப்பை பயணத்தை தொடங்கிய ரோஹித் தற்போது உலகக்கோப்பை தொடருக்கே தூதராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமைமிகு தருணம் என்பதில் ஐயமில்லை.
சகாப்தம்
17 ஆண்டுகால சகாப்தம்: 2007 முதல் 2024 வரை
ரோஹித் சர்மாவின் டி20 பயணம் மிகவும் பிரமிக்கத்தக்கது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு இளம் வீரராக அவர் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு சரியாக 17 ஆண்டுகள் கழித்து, 2024இல் ஒரு கேப்டனாக உலகக்கோப்பையை ஏந்தி தனது பயணத்தை நிறைவு செய்தார். இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற மிக சில வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் விளாசிய அரைசதம் மற்றும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சேர்த்த 30 ரன்கள் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாதவை. அதேபோல் 2024 தொடரில் 257 ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
நெகிழ்ச்சி
புதிய பொறுப்பு குறித்து ரோஹித் நெகிழ்ச்சி
முன்னதாக, இந்த நியமனம் குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, "டி20 உலகக் கோப்பை மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை ஒரு புதிய பொறுப்பில் இந்தத் தொடருடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்". "போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். அவர்கள் இந்தியாவின் விருந்தோம்பலை அனுபவித்து, சிறப்பான நினைவுகளுடன் திரும்புவார்கள் என்று நம்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.