Loading...
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: ஆன் சே யங்கிடம் போராடி தோற்றார் பிவி சிந்து
பிரெஞ்சு ஓபன் மகளிர் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து போராடி தோல்வி.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: ஆன் சே யங்கிடம் போராடி தோற்றார் பிவி சிந்து

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் ஆன் சே யங்கிடம் போராடித் தோல்வியடைந்தார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. 61 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், முதல் செட்டைத் தன்வசப்படுத்திய சிந்து அடுத்தடுத்த செட்களை இழந்து 21-16, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஆன் சே யங் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

ஆன் சே யங்கின் பதிலடி

முதல் செட் முன்னிலை

ஆட்டத்தின் தொடக்கத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2023 ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு ஆன் சே யங்கிற்கு எதிராகச் சிந்து செட்டை வென்றது இதுவே முதல் முறையாகும்.

ஆனால், இரண்டாவது செட்டில் ஆக்ரோஷமாக மீண்டு வந்த கொரிய வீராங்கனை, துல்லியமான ஸ்மாஷ் மற்றும் வலைக்கு அருகிலான அற்புதமான ஆட்டத்தால் சிந்துவிற்கு நெருக்கடி கொடுத்து அந்த செட்டை 21-11 எனக் கைப்பற்றி சமநிலையை ஏற்படுத்தினார்.

தொடர் தோல்வி

தீர்மானிக்கும் மூன்றாவது செட்

வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆரம்பத்தில் சிந்து 8-6 என முன்னிலை வகித்து நம்பிக்கை அளித்தார்.

எனினும், இடைவேளையின் போது 11-9 என முன்னிலை பெற்ற ஆன் சே யங், அதன்பின் சிந்து செய்த தவறுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆதிக்கத்தைச் செலுத்தினார்.

இறுதியில் 21-12 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

சர்வதேச அரங்கில் ஆன் சே யங்கிற்கு எதிராக சிந்து சந்திக்கும் தொடர்ச்சியான 11-வது தோல்வி இதுவாகும்.

இதன் மூலம் தனது 48-வது சர்வதேச பட்டத்தை வென்ற ஆன் சே யங், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீராங்கனையாகத் தனது சாதனையை மேலும் உயர்த்தியுள்ளார்.

ADVERTISEMENT