அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர்
கால்பந்து வரலாற்றில் ஜாம்பவானான பீலேவின் பெயர் தற்போது போர்த்துகீசிய மொழி அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது. புதனன்று (ஏப்ரல் 26), பிரேசிலில் அச்சிடப்பட்ட மைக்கேலிஸ் போர்த்துகீசிய அகராதியில் உள்ள 167,000க்கும் மேற்பட்ட சொற்களில் "பீலே" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. பீலே என்ற வார்த்தைக்கு "விதிவிலக்கான, ஒப்பிடமுடியாத, தனித்துவமானது" என்ற அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி பிரேசிலில் உள்ள 265 மில்லியன் போர்த்துகீசியம் பேசுபவர்கள், பீலே என்ற வார்த்தையை அசாதாரணமான ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தலாம். பீலே தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்து வாழ்க்கையில் சாண்டோஸ் (1956-74), பிரேசிலிய தேசிய அணி மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் (1975-77) அணிக்காக விளையாடிய போது உலக சாதனையாக 1,281 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.