ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் களமிறங்கும் இந்தியா; கடந்த கால புள்ளிவிபரங்கள்
கடந்த காலங்களில் ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய கால்பந்து அணி வெற்றி பெற முடியாமல் தவித்தே வந்துள்ளது. மேலும். வெற்றிகள் சில இருந்தபோதிலும், தகுதிச் சுற்றுகள் பெரும்பாலும் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. இந்நிலையில், இந்திய கால்பந்து அணி நவம்பர் 16 முதல் குவைத்துக்கு எதிரான மோதலில் தொடங்கி ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிச் சுற்றில் விளையாட உள்ளனர். தொடர்ந்து நவம்பர் 21 அன்று கத்தாருக்கு எதிராகவும் விளையாட உள்ள நிலையில், கடந்த காலங்களை போல அல்லாமல் இந்த முறை உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்கிடையே, இந்திய கால்பந்து அணியின் கடந்த கால சில சிறந்த ஆட்டங்களை இதில் பார்க்கலாம்.
இந்தியா 5-0 புருனே, 2002 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று
ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக 2002 இல் புருனேயை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தது அமைந்துள்ளது. இந்திய அணியின் தலைசிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக அறியப்படும் முன்னாள் கால்பந்து வீரர் சுக்விந்தர் சிங்கால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தியா, பெங்களூரில் நடந்த தகுதிச் சுற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. ஜூல்ஸ் ஆல்பர்டோ, பைசுங் பூட்டியா, ஐ.எம்.விஜயன், ஜோ பால் அஞ்சேரி மற்றும் ஹக்கீம் அப்துல் ஆகியோர் புருனேக்கு எதிராக கோல் அடித்து, இந்தியா மூன்றாவது வெற்றியை பெற வழி வகுத்தனர்.
இந்தியா 2-0 பிலிப்பைன்ஸ், 1998 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று
1998 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஒரே வெற்றி வலுவான பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக கிடைத்தது. போட்டியின் 81வது மற்றும் 85வது நிமிடங்களில் விஜயன் மற்றும் புருனோ கவுடின்ஹோ ஆகியோர் இந்திய அணிக்காக கோல் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற வழிவகுத்தனர். அந்த காலகட்டத்தில், ஆசிய அளவில் வலுவான அணிகளில் ஒன்றாக அறியப்பட்ட பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் தோற்றது கால்பந்து உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய வீரர்கள் அதிக நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த போட்டிக்கு பிறகு இந்திய வீரர்களின் செயல்திறம் மீண்டும் அதலபாதாளத்திற்கு சென்றது.
இந்தியா 1-0 சிங்கப்பூர், 2006 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று
2006 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பயிற்சியின் கீழ் இந்த தொடரில் களமிறங்கிய இந்தியா, கோவாவில் உள்ள ஃபடோர்டா மைதானத்தில் சிங்கப்பூரை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடிய நிலையில், 50வது நிமிடத்தில் இந்தியாவின் ரெனெடி சிங் தனி ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். சிங்கப்பூர் போட்டியை சமன்செய்ய கடுமையான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியும், அதை திறமையாக சமாளித்த இந்திய வீரர்கள் இறுதியில் 1-0 என வெற்றி பெற்றனர். 2006 இல் இந்தியாவின் பிரச்சாரத்திற்கு இது ஒரு பிரகாசமான தொடக்கமாகும்.
இந்தியா 1-0 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 2002 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று
2002 ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான வரலாற்று வெற்றி, இந்திய கால்பந்து அணியின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றாலும், முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காமல் கடும் போட்டி நிலவியது. எனினும் போட்டியின் இரண்டாவது பாதியில் 71வது நிமிடத்தில் ஆல்பர்டோ ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். 2002 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகள் இந்தியாவின் சிறந்த செயல்பட்டதை கண்ட தொடர்களில் ஒன்றாகும். அதில் இந்தியா 3 போட்டிகளில் வென்று 3வது இடத்தை பிடித்தது.
கத்தார் 0-0 இந்தியா, 2022 ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று
நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான கத்தாரை 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததால், 2022 ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் ஒன்றாக இது மாறியது. இந்திய அணியில் குர்ப்ரீத் சிங் சந்து எதிரணியின் சில பரபரப்பான கோல் முயற்சிகளை தடுத்து நிறுத்தினார். கத்தார் கோல் அடிக்க கடுமையான முயற்சிகளை செய்தாலும், இந்தியா கடுமையாக போராடி டிரா செய்தது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா அதன் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி இல்லாமல் களமிறங்கி தோல்வி அடையாமல் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.