இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டோட் மர்பி!
ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் டோட் மர்பி வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். 22 வயதான அவர் நாக்பூரில் நடைபெறும் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஸ்பின்னர் நாதன் லியானுடன் இணைந்து விளையாட உள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக விளையாடி வரும் மர்பி, இதுவரை 14 லிஸ்ட் ஏ மற்றும் ஏழு முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜாஸ் ஹேசல்வுட் முதல் போட்டியில் பங்கேற்காத சூழலில், கேமரூன் கிரீனும் பந்துவீச மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா நெருக்கடியான சூழலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அனைவரின் பார்வையும் டோட் மர்பி மீது திரும்பியுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் டோட் மர்பியின் புள்ளிவிபரங்கள்
மர்பி 2021 இல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 7 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கை 4/42 ஆகும். மேலும், இதுவரை மூன்று முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மர்பி 14 லிஸ்ட் ஏ மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றில் முறையே 12 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய மைதானங்கள் சுழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால், மர்பி இந்திய அணியை வீழ்த்த ட்ரம்ப் கார்டாக பயன்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியா 35 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர்களுடன் களமிறங்க உள்ளது.