டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் ஜோ ரூட்
ஹாக்லி ஓவலில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த போட்டி அவரது 150வது ஆட்டமாகும். இதில் நான்காவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸ்களில் 1,630 ரன்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் முன்னணியில் உள்ளார். 1,625 ரன்கள் குவித்த புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர், இப்போது பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள்
முதல் இரண்டு இடங்களில் ஜோ ரூட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ள நிலையில், தலா 1,611 ரன்களுடன் அலஸ்டர் குக் மற்றும் கிரேம் ஸ்மித் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் 1,580 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால் உள்ளார். இதற்கிடையே, மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இங்கிலாந்து முழுமையாக இழந்துள்ளது.