இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நோவாக் ஜோகோவிச்
அமெரிக்காவில் நுழைவதற்கான விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியன் வெல்ஸ் போட்டியில் இருந்து நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வீரர்களில் ஒருவரான ஜோகோவிச், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமியில் ஏடிபி மாஸ்டர்ஸ் நிகழ்வுகளில் விளையாட சிறப்பு அனுமதி கோரி கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பதால், இதற்காக விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) தெரிவித்தனர். அமெரிக்கா தற்போது தடுப்பூசி போடப்படாத வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது.
இந்தியன் வெல்ஸில் 2019 முதல் போட்டியிடாத நோவோக் ஜோகோவிச்
2019 ஆம் ஆண்டு முதல் ஏடிபி காலண்டரில் சன்ஷைன் டபுள் என்று அழைக்கப்படும் இரண்டு பெரிய போட்டிகளான இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமியில் நடக்கும் ஏடிபி மாஸ்டர்ஸ் நிகழ்வுகளில் ஜோகோவிச் போட்டியிடவில்லை. இந்நிலையில் தற்போதைய விலகல் குறித்தும் ஜோகோவிச் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக தடுப்பூசி கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலும், யுஎஸ் ஓபன் தொடரிலும் பங்கேற்கவில்லை. கொரோனா தடுப்பூசியை போட்டுத்தான் கிராண்ட்ஸ்லாம் ஆட வேண்டும் என்றால் விளையாட மாட்டேன் என அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.