ஐந்து ஐசிசி கோப்பைகளை ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த மெக் லானிங்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டின் 61 ரன்கள் மூலம் நல்ல அடித்தளம் அமைத்தாலும், 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை என்பதோடு, இரண்டாவது முறையாக ஹாட்ரிக் டி20 கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கேப்டனாக மெக் லானிங்கின் சாதனை
2014, 2018, 2020, 2023 டி20 உலகக்கோப்பை மற்றும் 2022 ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதன் மூலம் லானிங் தனது ஐந்தாவது ஐசிசி பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் நான்கு பட்டங்களை (2003, 2007 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2006, 2009 சாம்பியன்ஸ் டிராபி) வைத்திருக்கும் ரிக்கி பாண்டிங்கை முந்தியுள்ளார். இதற்கிடையே மெக் லானிங் 100 டி20 போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்திய முதல் கேப்டன் (ஆடவர் மற்றும் மகளிர்) ஆனார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 96 போட்டிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் அதிக டி20 போட்டிகளில் (76) ஒரு அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.