
பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 163 ரன்கள் குவித்தார்.
இது ஒருநாள் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்கு 21வது சதமாகும் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நான்காவது சதமாகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி நான்கு போட்டிகளிலும் சதமடித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை வார்னர் சமன் செய்தார்.
முன்னதாக, விராட் கோலி 2017 முதல் 2018 வரையிலான கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்திருந்தார்.
David warner equals Virat kohli unique record in odi
பாகிஸ்தானுக்கு எதிராக வார்னரின் கடைசி நான்கு ஒருநாள் ஸ்கோர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வார்னர் தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளிலும் எடுத்த ஸ்கோர் பின்வருமாறு:-
2017இல் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் 119 பந்துகளில் 130 ரன்களும், அடிலெய்டு மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 111 பந்துகளில் 107 ரன்களும் எடுத்தார்.
தொடர்ந்து 2019இல் டவுன்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் 85 பந்துகளில் அவுட்டாகாமல் 100 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது பெங்களூரில் 124 பந்துகளில் 163 ரன்களை எடுத்துள்ளார்.
இதற்கிடையே, இந்த போட்டியில் மிட்செல் மார்ஷுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகபட்ச தொடக்க ஆட்டக்காரர்களின் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்துள்ளனர்.