பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் சுயமாக முன்வந்தார்: உஸ்மான் கவாஜா சுயசரிதையில் தகவல்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா எழுதியுள்ள சுயசரிதை நூலில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தைச் சேதப்படுத்திய 'சாண்ட்பேப்பர் கேட்' சர்ச்சை குறித்துப் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே கெபர்ஹா டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்த கேமரூன் பேன்கிராஃப்ட் தாமாக முன்வந்ததாக கவாஜா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பழைய சர்ச்சைகளைக் கடந்து பேன்கிராஃப்ட் தனது சிறப்பான பேட்டிங் மூலமாகவே பதிலடி கொடுக்க விரும்புவதாக மேற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பியூ காசன் தெரிவித்துள்ளார்.
சுயசரிதை
சுயசரிதையில் உஸ்மான் கவாஜா கூறியுள்ள விவரங்கள்
வெளியாகவுள்ள தனது 'சப்ர்' என்ற சுயசரிதை புத்தகத்தில் கவாஜா பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டாவது டெஸ்டின் போது எல்லையோரக் கோட்டில் நடுவர்கள் வைத்த பந்தை எடுத்துச் சாண்ட்பேப்பர் கொண்டு தேய்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது டேவிட் வார்னர் தன் மீது பலரின் கவனம் இருப்பதால் தன்னால் செய்ய முடியாது எனக் கூறியதாகவும் கவாஜா குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ஆறு போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த பேன்கிராஃப்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் "நான் செய்கிறேன்" எனத் தாமாக முன்வந்து தெரிவித்ததாகக் கவாஜா அதில் பதிவு செய்துள்ளார்.
பயிற்சியாளர்
பழைய விவகாரத்தை கடந்து செல்ல பேன்கிராஃப்ட் உறுதி
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பயிற்சியாளர் பியூ காசன், "அந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த விமர்சனங்கள் அனைத்தையும் கடந்து பேன்கிராஃப்ட் தனது பேட்டிங் மூலமாகப் பதில் சொல்லவே விரும்புகிறார்".
"நம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கடந்த சில வாரங்களாகவும் கடந்த சில ஆண்டுகளாகவும் அவர் இந்த அழுத்தங்களை எதிர்கொண்ட விதம் அவருடைய முதிர்ச்சியையும் தன்மையையும் வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
2018 விவகாரத்தில் பேன்கிராஃப்ட் ஒன்பது மாதங்கள் சர்வதேசத் தடையும், வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டுத் தடையும் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.