IND vs AUS டெஸ்ட் : மூன்றாவது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படும் என தகவல்!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் எஸ்பிரஸின் கூற்றுப்படி, பிசிசிஐயின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தர்மசாலா ஆடுகளத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால், தற்போது நடந்து வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில், இமாச்சல பிரதேச அணி தனது சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மைதானத்தை ஆய்வு செய்த பிசிசிஐ, பணிகள் இன்னும் முழுமையடையாதது குறித்து கவலை தெரிவித்ததோடு, போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலையால் அவதியுறும் தர்மசாலா கிரிக்கெட் மைதானம்
உலக அளவில் கிரிக்கெட்டின் மிக அழகிய மைதானங்களில் ஒன்றான தர்மசாலா, கடைசியாக 2017இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை நடத்தியது. இங்கு நடந்த ஒரே டெஸ்ட் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியை தவிர்த்து பல ஒருநாள், டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெற்றிருந்தாலும், எதிர்பாராத பலத்த மழை தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு தடையாக உள்ளது. இங்கு பல சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகள் கனமழையால் கைவிடப்பட்டுள்ள நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதனால் கடந்த 2022 பருவமழைக்கு பிறகு வடிகால் கட்டமைப்பை சீரமைக்கும் பணியை மாநில கிரிக்கெட் வாரியம் தொடங்கிய நிலையில், அது முடிவு பெறாததால்,சர்வதேச போட்டியை நடத்த கிடைத்த வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.