SLvsNZ முதல் டெஸ்ட் : நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹெக்லி ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்கள் எடுத்தது. குஷால் மெண்டிஸ் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 373 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸ் முடிவில் 18 ரன்கள் முன்னிலை பெற்றது. டேரி மிட்செல் சதமடித்தார். அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இலங்கையின் ஏஞ்செலோ மேத்யூஸ் சதமடித்த நிலையில், அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 285 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து போட்டியின் கடைசி நாளான திங்கட்கிழமை (மார்ச் 13) கேன் வில்லியம்சனின் அபார சதம் மூலம் கடைசி பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பெற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை தோற்றுவிட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையே இலங்கை அணி மார்ச் 17ஆம் தேதி நியூசிலாந்தை இரண்டாவது டெஸ்டில் எதிர்கொள்ள உள்ளது.