LOADING...
இளம் சாம்பியன்களுக்கு பிசிசிஐயின் மெகா பரிசு; உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு கொட்டிக்கொடுத்த பிசிசிஐ; எவ்வளவு தெரியுமா?
யு19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு

இளம் சாம்பியன்களுக்கு பிசிசிஐயின் மெகா பரிசு; உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு கொட்டிக்கொடுத்த பிசிசிஐ; எவ்வளவு தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2026
01:13 pm

செய்தி முன்னோட்டம்

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளையோர் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பெரும் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. கேப்டன் ஆயுஷ் மாத்திரே தலைமையிலான இந்த அணிக்கு மொத்தம் ₹7.50 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா சனிக்கிழமை அறிவித்தார். ஐசிசி தரப்பில் யு19 அணிகளுக்குத் தனியாக ரொக்கப் பரிசுகள் வழங்கப்படாத நிலையில், பிசிசிஐ தனது வீரர்களை ஊக்குவிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.

பாராட்டு

பிசிசிஐ செயலாளர் மற்றும் துணைத் தலைவர் பாராட்டு

இந்த வெற்றி குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், "எங்கள் இளம் சாம்பியன்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இன்று இந்தியாவில் தொடங்கவுள்ள மூத்த வீரர்களுக்கான டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு நல்ல தொடக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களுக்குச் சேர்த்து இந்த ₹7.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது." எனத் தெரிவித்தார். மேலும், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசுகையில், "பிசிசிஐ உருவாக்கி வைத்துள்ள வலுவான கட்டமைப்பு மற்றும் நீண்ட கால முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் பிரமிக்க வைத்தது." எனப் புகழாரம் சூட்டினார்.

சாதனை

இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களின் சாதனை

இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இதில் 15 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்களில் கேப்டன் ஆயுஷ் மாத்திரே 53 ரன்களும், விக்கெட் கீப்பர் அபிக்யான் குந்து 40 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கனிஷ்க் சௌகான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். 412 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்தை 311 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து, இந்தியப் பந்துவீச்சாளர்கள் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர்.

Advertisement

நட்சத்திரங்கள்

இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்கள்

இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அறிவித்துள்ள இந்தப் பரிசுத் தொகை, இளம் வீரர்களுக்குத் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், அடுத்த நிலைக்குச் செல்லவும் பெரும் உதவியாக இருக்கும். சொந்த மண்ணில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் ஆடும் இந்திய சீனியர் அணிக்கும், இந்த இளம் வீரர்களின் வெற்றி ஒரு பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

Advertisement