பார்சிலோனா கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விலகும் ஜோர்டி ஆல்பா!
செய்தி முன்னோட்டம்
ஜோர்டி ஆல்பா பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசன் முடிவில் வெளியேறுவார் என்று கிளப் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பார்சிலோனா கிளப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "பார்சிலோனா மற்றும் ஆல்பா இடையே 2023-24 சீசன் இறுதி வரையில் உள்ள ஒப்பந்தத்தில் இருந்து வீரரை விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது.
மேலும், பார்சிலோனா கிளப்பிற்காக அவர் இத்தனை வருடங்கள் ஆற்றிய சேவைக்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அணியின் கேப்டன் செர்ஜியோ புஸ்கெட்ஸும் விரைவில் விலகுவதாக அறிவித்துள்ளதால், அடுத்தடுத்து வீரர்கள் வெளியேறுவது பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
Jordi alba leaves barcelona
பார்சிலோனா கிளப்பில் ஜோர்டி ஆல்பாவின் புள்ளிவிபரங்கள்
ஆல்பா 2012 இல் வலென்சியாவில் இருந்து விலகி பார்சிலோனாவில் சேர்ந்தார். பார்சிலோனாவுக்காக ஆறு லா லிகா பட்டங்கள் மற்றும் ஒரு சாம்பியன்ஸ் லீக் உட்பட 19 கோப்பைகளை வென்றுள்ளார்.
ஆல்பா பார்சிலோனாவுக்காக 450 தடவைகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இதில் 27 கோல்களை அடித்துள்ளதோடு, 91 அசிஸ்ட்களையும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையே ஆல்பாவுக்கு பார்சிலோனாவுடனான ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு வருடம் மீதமுள்ள நிலையில், அணியில் தனது இடத்தை இளம் வீரர் அலெஜான்ட்ரோ பால்டேவிடம் கொடுத்ததால் அதிருப்தியில் உடனடியாக விலகியுள்ளதாக தெரிகிறது.
மேலும் லியோனல் மெஸ்ஸியை பின்பற்றி சவூதி புரோ லீக்கில் ஆல்பா இணைய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.