டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்கள் : கோலி, கெயிலை பின்னுக்குத் தள்ளி பாபர் அசாம் சாதனை
பாகிஸ்தானின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான பாபர் அசாம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட்டின் நடப்பு சீசனில் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். தற்போது பிஎஸ்எல்லில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில், முகமது ரிஸ்வானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராக பாபர் தலைமையில் பெஷாவர் சல்மி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் ஆனார்.
டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த வீரர்கள்
பாபர் அசாம் மொத்தம் 245 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை டி20 கிரிக்கெட்டில் எட்டியுள்ளார். முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் 249 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்திய நட்சத்திர பெட்டர் விராட் கோஹ்லி 271 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 273 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்கள் மைல்கல்லை எட்டி நான்காவது இடத்திலும், ஆரோன் ஃபின்ச் 281 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை எட்டி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.