ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி!
ஆஸ்திரேலிய ஓபன் 2023 சீசனில் இந்திய கலப்பு இரட்டையர்களான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. சானியாவும் போபண்ணாவும் ஏரியல் பெஹர் மற்றும் மகோடோ நினோமியாவை 6-4, 7-6(9) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) அன்று, அலிசன் வான் உய்ட்வான்க் மற்றும் அன்ஹெலினா கலினினாவிடம் தோல்வியடைந்ததால், சானியா மற்றும் அவரது ஜோடி அன்னா டானிலினா பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளதால், பதக்க வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். சானியா மற்றும் போபண்ணா ஜோடி, கால் இறுதியில் ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸை எதிர்கொள்கிறது.
சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு
36 வயதான சானியா 2023 ஆஸ்திரேலிய ஓபன், தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என ஏற்கனவே அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை சமூக ஊடக பதிவின் மூலம் வெளியிட்ட சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் முடிந்த பிறகு பிப்ரவரியில் நடக்கும் துபாய் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளதாகவும், அதுவே தனது கடைசி போட்டி என்றும் தெரிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதுவரை மொத்தம் 6 சாம்பியன்ஷிகளை வென்றுள்ளார். இதில் மூன்று இரட்டையர் பிரிவிலும், மூன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.