இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் எட்டு வாரம் ஓய்வெடுக்க செல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், நவம்பரில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக விளையாட்டில் இருந்து எட்டு வார இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டின் (எம்எல்சி) இரண்டாவது சீசனில் பங்கேற்றிருந்த கம்மின்ஸ் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார். மேலும், அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒயிட்-பால் சுற்றுப்பயணத்தில் அணி நிர்வாகம் அவருக்கு ஓய்வளித்துள்ளது. அவரது பணிச்சுமையை முன்கூட்டியே சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய தொடரை மனதில் வைத்து ஓய்வெடுக்க உள்ளதாக கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபியை ஒருமுறை கூட வெல்லாத பேட் கம்மின்ஸ்
பார்டர் கவாஸ்கர் டிராபி என்பது ஆஷஸ் தொடரைப் போல இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான உலக அளவில் கவனம் ஈர்க்கும் ஒரு முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். இந்த தொடரில் 2011 முதல் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்த நிலையில், இந்த முறை முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட உள்ளன. பார்டர் கவாஸ்கர் டிராபியைப் பொறுத்தவரை, 2018-19 முதல் கடைசியாக நடந்து நான்கு தொடர்களிலும் வெற்றி பெற்று இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நான்கு தொடர்களில் இரண்டு ஆஸ்திரேலியாவிலும், இரண்டு இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் தான் இதுவரை வெல்லாத கோப்பை இதுதான் எனக் கூறியுள்ளதோடு, இந்த முறை கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.