ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2023 : நான்காவது முறையாக ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2023 இல், ஆஸ்திரேலிய ரன் மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித், மதிப்புமிக்க ஆலன் பார்டர் பதக்கத்தைப் பெற்றார். நான்காவது முறையாக இந்த விருதை பெறுவதன் மூலம், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்களான ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமன் செய்துள்ளார். 171 வாக்குகளுடன், ஸ்மித் டிராவிஸ் ஹெட் (144 வாக்குகள்) மற்றும் டேவிட் வார்னர் (141) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விருதை வென்றுள்ளார். அவர் முன்னதாக 2015, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் விருதை வென்றுள்ளார். ஸ்மித் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் சதங்களை அடித்தார். அவர் அனைத்து வடிவங்களிலும் 1,524 ரன்கள் குவித்து, மிகச் சிறந்த பார்மில் உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2023 : முழு வெற்றியாளர்களின் பட்டியல்
மகளிர் கிரிக்கெட்டில், பெத் மூனி இரண்டாவது முறையாக பெலிண்டா கிளார்க் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனை விருதையும் அவர் வென்றுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஷேன் வார்னே விருதுக்கு உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார். டேவிட் வார்னர் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆட்ட வீரர் விருதை வென்றார். மார்கஸ் ஸ்டோனிஸ் இந்த ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதை வென்றார். மகளிர் பிரிவில் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனையாக தஹ்லியா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெட்டி வில்சன் இளம் கிரிக்கெட் வீரராக கர்ட்னி சிப்பல், பிராட்மேன் இளம் கிரிக்கெட் வீரராக லான்ஸ் மோரிஸ் மற்றும் சமூக தாக்க விருதுக்கு உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.