டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
மார்கஸ் ஸ்டோனிஸின் அபாரமான அரைசதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஹோபர்ட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஆஸ்திரேலிய அணி பெல்லேரிவ் ஓவல் மைதானத்தில் வெறும் 11.2 ஓவர்களில் 118 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆல் டைம் சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிடம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து சிறப்பாக மீண்டது. மழையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டம் உட்பட மூன்று ஆட்டங்களிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது.
டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்னர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆறு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், முந்தைய சாதனையை விட ஒரு வெற்றியை கூடுதலாக பெற்று, ஏழு வெற்றிகளுடன் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து அதிக வெற்றிகளை கொண்ட அணியாக மாறியுள்ளது. இந்த பட்டியலில் தலா 5 வெற்றிகளுடன் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன.