பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என்று ஆஸ்திரேலியா பேட்டர் மாட் ரென்ஷா தெரிவித்துள்ளார். 2021 இல் இடது கை பேட்ஸ்மேன்களின் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை அஷ்வின் படைத்தார். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் ரென்ஷா உட்பட பலர் இடது கை பேட்டர்களாக இருப்பதால், அஸ்வினால் தங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என ஆஸ்திரேலியாவின் ரென்ஷா கருதுகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?
வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணி எந்த சிக்கலும் இல்லாமல் தகுதி பெற பார்டர்-கவாஸ்கர் தொடர் முக்கியமானதாக மாறியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்தியா நேரடியாக தகுதிபெற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 அல்லது 3-1 என வென்றாக வேண்டும். இல்லையெனில், இலங்கை-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் கடைசி வரை தித்திக் மனநிலையோடு இருக்க கூடாது என்றால், ஆஸ்திரேலியா தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.