ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!
ஐந்தாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, ஆஸ்திரேலிய ஓபன் 2023ல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ரைபாகினாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார். பெலாரஸ் நாட்டை சேர்ந்த 24 வயதான அரினா சபலெங்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மூன்று செட்களில் (4-6, 6-3, 6-4) எலினா ரைபாகினாவை வீழ்த்தி தோற்கடித்து கைப்பற்றியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் தனது 12வது டபிள்யூடிஏ ஒற்றையர் பட்டத்தையும், நடப்பு சீசனின் இரண்டாவது பட்டத்தையும் வென்றுள்ளார். மேலும் இது அரினா சபலெங்காவின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரினா சபலெங்கா கடந்து வந்த பாதை
இந்தப் போட்டிக்கு முன், சபலெங்கா டபிள்யூடிஏ சுற்றுப்பயணத்தில் 20 தொடர்ச்சியான செட்களில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தனது கடைசி 10 போட்டிகளிலும் நேர் செட்களில் வென்றார். ஒப்டாவின் கூற்றுப்படி, 2002 இல் அன்னா ஸ்மாஷ்னோவா மற்றும் 2013 இல் அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவுக்குப் பிறகு இந்த நூற்றாண்டில் தனது முதல் 10 போட்டிகளில் ஒரு செட்டையும் கைவிடாமல் வென்ற மூன்றாவது பெண் சபலெங்கா ஆவார். மேலும், சபலெங்கா டபிள்யூடிஏ போட்டிகளில் ரைபகினாவுக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், நான்கிலும் சபலெங்காவே வெற்றி பெற்றுள்ளார்.