2002 வெஸ்ட் இண்டீஸ் தொடர் : உடைந்த தாடையோடு விளையாடியதை நினைவுகூர்ந்த அனில் கும்ப்ளே
செய்தி முன்னோட்டம்
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் புதன்கிழமை (ஜூலை12) மோத உள்ளன.
இந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2002 இல் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
வெஸ்ட் இண்டீசின் ஆண்டிகுவாவில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் மெர்வின் தில்லன் வீசிய ஷார்ட் பந்து வீச்சால் அனில் கும்ப்ளேவின் தாடை உடைந்தது.
இதனால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அடுத்த நாள் இந்தியா கிளம்ப திட்டமிட்டிருந்த நிலையில், வெளியேறும் முன், இந்திய அணிக்கு உதவ அதே நாளில் பந்துவீச வந்தார்.
anil khumble remembers 2002 series
தலையில் கட்டோடு பந்துவீசிய அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளே தலையில் கட்டுடன் 14 ஓவர்கள் பந்துவீசி ஜாம்பவான் பேட்டர் பிரையன் லாராவை அவுட் ஆக்கிவிட்டே நாடு திரும்பினார்.
இதை தற்போது ஜியோ சினிமாவில் பேசும்போது நினைவுகூர்ந்த அனில் கும்ப்ளே, காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இந்தியா வருவதாக கூறியதை அடுத்து மனைவி சேத்னா பெங்களூரில் அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக கூறினார்.
எனினும், மீண்டும் மனைவிக்கு போன் போட்டு, தான் உடைந்த தாடையோடு பந்துவீச செல்வதாக கூறியபோது, நகைச்சுவையாக நினைத்துக் கொண்டு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கும்ப்ளே கூறினார்.
மேலும், அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பேட்டர்களாக லாரா, சயீத் அன்வர், ஜாக் காலிஸ் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.