100% உடல் தகுதியுடன் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் கேமரூன் கிரீன்
இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 100% உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார். 2022 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டின் போது 23 வயதான அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிலிருந்து முழுமையாக குணமடையாததால் முதல் 2 டெஸ்டிலும் கேமரூன் கிரீன் பங்கேற்கவில்லை. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 0-2 என பின்தங்கி இருக்கும் நிலையில், கேமரூன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரூன் கிரீனின் டெஸ்ட் புள்ளிவிபரங்கள்
டிசம்பர் 2020 இல் கேமரூன் கிரீன் டெஸ்ட் அறிமுகமானதிலிருந்து ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான ஒரு சக்தியாக இருந்து வருகிறார். அவர் தற்போது 18 டெஸ்டில் 35.04 சராசரியில் 806 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் ஆறு அரைசதங்கள் அடங்கும். பந்து வீச்சில், அவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் தற்போது அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர் ஏப்ரல் 13 வரை பந்துவீசுவதைத் தவிர்க்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பணிச்சுமை மேலாண்மை கொள்கை வழிகாட்டுதலின் கீழ் முடிவெடுத்துள்ளது. இதனால் ஐபிஎல்லில் அவரை எடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.