சிறந்த இந்திய டெஸ்ட் அணி: கோலி, பும்ராவை புறக்கணித்த ரஹானே, தோனிக்கு கேப்டன் பதவி
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான அஜிங்கியா ரஹானே, தனது சிறந்த இந்திய டெஸ்ட் லெவன் (All-time Indian Test XI) அணியைத் தேர்வு செய்துள்ளார். சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நடைபெற்ற நேர்காணலின் போது, சர்வதேச அல்லது உள்நாட்டு கிரிக்கெட்டில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்த அணியை அவர் கட்டமைத்தார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற ரஹானே, இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரைத் தனது அணியில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க வீரர்கள்
மிடில் ஆர்டர் மற்றும் தோனி கேப்டன்சி
தனது அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ரஹானே தேர்வு செய்தார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து 3-வது இடத்தில் 'தி வால்' ராகுல் டிராவிட்டையும், 4-வது இடத்தில் விராட் கோலிக்குப் பதிலாக கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரையும் களமிறக்கியுள்ளார்.
5-வது இடத்திற்குத் தன்னையே தேர்வு செய்து கொண்ட ரஹானே, 6-வது இடத்தில் தனது முதல் சர்வதேச கேப்டனான மகேந்திர சிங் தோனியை விக்கெட் கீப்பராகவும், ஒட்டுமொத்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் மற்றும் சுழற்பந்து வீச்சுப் பொறுப்புகளுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடர்
வேகப்பந்து வீச்சில் பும்ரா புறக்கணிப்பு
வேகப்பந்து வீச்சுப் பிரிவில் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர்த்துவிட்டு, முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய மூவருக்கு ரஹானே வாய்ப்பளித்துள்ளார்.
2010-களின் பிற்பகுதியில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவிக்க இந்த மூவர் கூட்டணியே முக்கியப் பங்களிப்பை வழங்கியதை சுட்டிக்காட்டி இவர்களை அவர் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவுக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,077 ரன்கள் குவித்துள்ள ரஹானே, 2020-21-ல் ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த டெஸ்ட் அணி
ரஹானே தேர்வு செய்த டெஸ்ட் லெவன் அணி
முரளி விஜய், ஷிகர் தவான், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், அஜிங்கியா ரஹானே, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா.