சேப்பாக்கத்தில் கருணாநிதி கேலரியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய கேலரியை, அவரது மகனும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 2021 இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில பகுதிகளை புனரமைக்கும் பணி தொடங்கியது. ரூ.139 கோடியில் நடந்த புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதனுடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து கட்டிய 5,000 இருக்கைகள் கூடிய புதிய கேலரிக்கு கருணாநிதி பெயர் வைத்து திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கருணாநிதிக்கு சேப்பாக்கத்துடனான தொடர்பு
கிரிக்கெட் மீது தீரா ஆர்வம் கொண்ட கருணாநிதி, சேப்பாக்கம் மைதானம் புனரமைக்கப்பட்டபோது ரூ.15 லட்சம் வழங்கியதற்காக அவரை கௌரவிக்கும் வகையில் பெயர் சூட்டப்படுவதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கௌதம் சிகாமணி தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட, கடும் பணிகளுக்கு மத்தியில் சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடந்தால் நேரில் பார்ப்பதை தவற விட மாட்டார். வயது முதிர்ச்சியின் காரணமாக வீல்சேரில் அமர்ந்து அவர் பந்துவீசிய புகைப்படம் இப்போதும் பலருக்கு நினைவிருக்கும். மேலும் சென்னைக்கு தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வரும்போது, அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.