ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற இருந்த 2வது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் ஐசிசி உலகக் கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறுவது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் அடுத்து நடக்க உள்ள 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இந்த ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு மே 2023 நிலவரப்படி சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான அடுத்த வாய்ப்புக்கள் என்னென்ன?
முதல் எட்டு இடங்களில் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நேரடியாக தகுதி பெறும் நிலையில் தற்போது உள்ளன. மேலும் தற்போதைய சூழ்நிலையின்படி, இலங்கை நேரடி தகுதியை இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நேரடி தகுதியை இழக்கும் சமயத்தில், அசோசியேட் அணிகள் பங்குபெறும் தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி தகுதி பெற்று மீண்டும் வர வேண்டும். அயர்லாந்து ஏற்கனவே தகுதியை இழந்து விட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவும் பின் தங்கி உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் உள்ள நிலையில், அவற்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது.