IND vs AUS 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா 263 ரன்களுக்கு சுருட்டியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் ஆஸ்திரேலிய அணி ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இரண்டு வீரர்கள் அரைசதம் கடந்த நிலையில் அணியின் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்தது. ஆனால் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 3வது செஷனில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் நிலைத்து நிற்க முடியாமல் முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
இந்திய பந்துவீச்சு அபாரம்
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 125 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். எனினும் அவருக்கு எதிர்முனையில் இருந்த வீரர்கள் இந்திய பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். லோயர் ஆர்டரில் பேட் கம்மின்ஸ் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடினர். ஆனால் கம்மின்ஸ் 33 ரன்களில் அவுட்டானார். ஹேண்ட்ஸ்கோம்ப் கடைசி வரை அவுட்டாகாமல் 72 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.