ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி
இன்றைய சமூக சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் கருத்தரிப்பு மையங்களைத் தேடி செல்கின்றனர். கருத்தரிப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் வாடகை தாய், செயற்கை கருவூட்டல் போன்ற முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், எக்ட்டோ லைப் (EctoLife) எனும் பெர்லினை தலைமையாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை மூலம் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியப்படும் பட்சத்தில், ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை இதன் மூலம் உருவாக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர் போன் மூலம் பார்க்கலாம்
அதில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. புற்றுநோயால் கர்ப்பப்பையை இழந்த பெண்கள் மற்றும் பிற காரணங்களால் கருத்தரிக்க முடியாதவர்கள், மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்த செயற்கை கருப்பை வசதி பெரிதும் உதவும். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர் தங்கள் மொபைல் போனின் மூலம் அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் நேரலை வீடியோவும், வளர்ச்சியின் டைம் லாப்ஸ் வீடியோவும் வழங்கப்படும். 360 டிகிரி வயர்லஸ் கேமரா குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பொருத்தப்பட்டு, அதன்மூலம் குழந்தையின் இடத்தில் இருந்து குழந்தை பார்ப்பதைப் பார்க்கவும், குழந்தை கேட்பதை கேட்கவும் முடியும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன பாடலை கேட்க வேண்டும் என்பதை கூட தேர்வு செய்தோ அல்லது அவர்களே பாடியோ அனுப்பலாம் என்று பல விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.