இனி OTP திருடினாலும் ஹேக் பண்ண முடியாது! வாட்ஸ்அப்பில் 6 டிஜிட் PIN நீக்கம்; புதிய அப்டேட்கள்
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் கணக்குகளை ஹேக்கிங் மற்றும் சோஷியல் இன்ஜினியரிங் மோசடிகளில் இருந்து பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இருபடி சரிபார்ப்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 இலக்க PIN முறைக்கு பதிலாக, இனி எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் அடங்கிய வலிமையான பாஸ்வேர்டை உருவாக்க முடியும். இதன் மூலம் ஒருவர் உங்கள் ஓடிபி எண்ணைத் திருடினாலும் வாட்ஸ்அப் கணக்கைக் கைப்பற்றுவது கடினமாகும்.
பாஸ்கீ வசதி
ஒரே கணக்கிற்கு பல 'பாஸ்கீ' (Passkeys) சேர்க்கும் வசதி
பாஸ்வேர்டுகளை நினைவில் வைப்பதைத் தவிர்க்க உதவும் 'பாஸ்கீ' (Passkey) வசதியை ஏற்கனவே 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் கணக்கிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்கீகளைச் சேர்த்துக் கொள்ளும் வசதியை மெட்டா வழங்கியுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என இரண்டு சாதனங்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விரல்ரேகை, ஃபேஸ் ஐடி அல்லது ஸ்கிரீன் லாக் மூலம் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம்.
தெரியாத எண்கள்
தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்குக் கூடுதல் எச்சரிக்கை
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய அம்சமாக, தொடர்பில் இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது கூடுதல் விவரங்கள் திரையில் தோன்றும்.
அழைப்பவர் வேறு நாட்டை சேர்ந்தவரா மற்றும் உங்களுடன் ஏதேனும் பொதுவான வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்துள்ளாரா என்ற விவரங்களை அழைப்பை ஏற்கும் முன்பே தெரிந்து கொள்ள முடியும்.
இது போலியான அழைப்புகளைக் கண்டறிந்து தவிர்க்க உதவும்.
புதிய அம்சங்கள்
புதிய செக்யூரிட்டி அம்சங்களை செயல்படுத்துவது எப்படி?
இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிக்க வேண்டும்.
பின்னர், Settings > Account > Two-Step Verification பகுதிக்கு சென்று பழைய 6 டிஜிட் PIN-க்கு பதிலாகப் புதிய பாஸ்வேர்டை அமைக்கலாம்.
அதேபோல Settings > Account > Passkeys பகுதிக்கு சென்று தங்களின் மொபைல் போனுக்கு ஏற்ப பாஸ்கீகளை அமைத்துக் கொள்ள முடியும்.