Page Loader
5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்?
5G சேவையைத் தொடங்கும் வோடபோன்

5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்?

எழுதியவர் Prasanna Venkatesh
May 17, 2023
04:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, அடுத்த மாதம் இந்தியாவில் 5G சேவையை தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான நிதியுதவிக்காக சில வங்கிகளுடன் அந்நிறுவனம் கைகோர்த்திருக்கிறது. நிதியுதவிக்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் நிறைவடையும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே 5G சேவையையும் தொடங்கவிருக்கிறது வோடபோன். இதுவரை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5G சேவையை வழங்கி வந்தன. மூன்றாவதாக ஒரு நிறுவனம் 5G சேவையை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கும், தொலைதொடர்பு சந்தைக்கும் நன்மை அளிப்பதாகவே இருக்கும். மேலும், 5G வலைப்பின்னலுக்கான உபகரணங்களை நோக்கியா நிறுவனமே வோடபோனிற்கு வழங்கவிருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு நோக்கியாவே உபகரணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வோடபோன்

வோடபோனின் திட்டம் என்ன? 

இதுவரை கிடைத்த தகவல்களின்படி மூன்றாம் காலண்டிற்கான உரிமைத்தொகையை ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்திவிட்டதாகவும், நான்காம் காலாண்டிற்கான உரிமைத்தொகையிலும் பாதி தொகையை தெலுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் Standalone (SA) தொழில்நுட்பத்தில் 5G சேவையையும், ஜியோ நிறுவனம் Non- Standalone (NSA) தொழில்நுட்பத்தில் 5G சேவையையும் வழங்கி வருகிறது. இதில் வோடபோன் எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறது எனக் கூறப்படவில்லை. SA தொழில்நுட்பத்தில் குறைவான தாமதத்துடன் அதிக டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தில் 5G சேவையை அளிக்க முடியும். NSA தொழில்நுட்பமானது நடைமுறைப்படுத்துவதற்கு எளிதானது. மேலும், ஏற்கனவே இருக்கும் 4G கட்டமைப்பைக் கொண்டே 5G சேவையை வழங்க முடியும். இதனால் நடைமுறைப்படுத்தும் செலவும் குறைவாக இருக்கும்.