சர்வம் நிறுவனத்தின் Indus ஆப் வெளியானது! தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேசலாமா? இதோ முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம், தனது புதிய சாட்பாட் செயலியான இண்டஸ் (Indus) ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அமைதியாக வெளியிட்டுள்ளது. உலகளாவிய ஏஐ கருவிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவனம் செலுத்தும் சூழலில், இந்தியப் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொழிகளைச் சரளமாகப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் திறன் கொண்டது.
சிறப்பம்சங்கள்
இண்டஸ் ஏஐயின் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்தச் செயலி வெறும் கேள்வி பதில் தளமாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த உதவியாளராகவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி, இடையில் ஹிந்தி அல்லது மற்ற இந்திய மொழிகளுக்கு மாறினாலும், இந்த ஏஐ எவ்விதத் தடங்கலும் இன்றி உங்களுடன் உரையாடும். நாம் அன்றாட வாழ்வில் பேசும் முறையிலேயே இது பதிலளிக்கும். தட்டச்சு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் குரல் கட்டளைகள் மூலமாகவும் இதைப் பயன்படுத்தலாம். இது இணையத்தில் தகவல்களைத் தேடி உங்களுக்கு விரிவான விளக்கங்களைத் தரும். பிடிஎஃப் கோப்புகள், புகைப்படங்கள் அல்லது இதர ஆவணங்களை இதில் அப்லோட் செய்து, அதிலுள்ள தகவல்கள் குறித்து நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம். மேலும், வெறும் சாட்டிங் மட்டுமின்றி, செயலியில் இருந்தபடியே ஆவணங்களை எழுதவும், திருத்தவும் முடியும்.
தொழில்நுட்பம்
எந்தத் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது?
இந்த செயலி எந்த மாடலில் இயங்குகிறது என்பதை சர்வம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 நிகழ்வில் அந்நிறுவனம் Sarvam-30B மற்றும் Sarvam-105B ஆகிய இரண்டு பெரிய மொழி மாதிரிகளை அறிமுகப்படுத்தியது. எனவே, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த மாடல்கள்தான் இண்டஸ் செயலிக்குப் பின்னால் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பயன்பாடு
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
நீங்கள் இப்போதே கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Indus செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்: உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து கணக்கைத் தொடங்க வேண்டும். பதிவு செய்தவுடன் நீங்கள் ஒரு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவீர்கள். உங்களிடம் அழைப்புக் குறியீடு இருந்தால், உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். மற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக அனுமதி வழங்கப்படும்.