நுரையீரலே இல்லாம 2 நாள் உயிர் வாழ்ந்த அதிசயம்; மெல்ட் ஆன நுரையீரலும், மீண்டு வந்த உயிரும்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மருத்துவர்கள், உலகையே வியக்க வைக்கும் ஒரு அறுவை சிகிச்சை சாதனையைப் புரிந்துள்ளனர். 33 வயது மதிக்கத்தக்க ஒரு நோயாளிக்கு, அவரது இரண்டு நுரையீரல்களும் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, செயற்கை நுரையீரல்கள் மூலம் 48 மணிநேரம் அவரை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் நுரையீரல் செயலிழந்த நோயாளிகளுக்குப் புதிய வாழ்வாதாரம் கிடைத்துள்ளது.
உருகிய நுரையீரல்
உருகிய நுரையீரலும், இக்கட்டான நிலையும்
ஃபுளூ காய்ச்சல் மற்றும் பாக்டீரியா நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளிக்கு, ARDS (Acute Respiratory Distress Syndrome) எனப்படும் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அவரது நுரையீரல்கள் தொற்றுநோயால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உருகத் (Melting) தொடங்கின. நிலைமை எவ்வளவு மோசமாக இருந்ததென்றால், அவர் மருத்துவமனைக்கு வந்த உடனேயே அவரது இதயம் நின்றுவிட்டது. அவருக்கு உடனடியாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, ஆனால் அவரது உடலில் இருந்த தொற்று குறையாமல் புதிய நுரையீரலைப் பொருத்த முடியாது என்ற சூழல் நிலவியது.
செயற்கை சுவாசம்
48 மணிநேரம் நீடித்த செயற்கை சுவாசப் போர்
தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் அங்கித் பாரத் தலைமையிலான குழுவினர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தனர். நோயாளியின் பாதிக்கப்பட்ட இரண்டு நுரையீரல்களையும் முழுமையாக அகற்றினர். பின்னர், ஒரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை நுரையீரல் அமைப்பின் மூலம் அவரது இரத்தத்தில் ஆக்சிஜனை ஏற்றி, கார்பன் டை ஆக்சைடை அகற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருந்தனர். நுரையீரல் இல்லாத நிலையில் இதயம் எவ்வாறு செயல்படும் என்ற சவாலைத் தகர்த்து, 48 மணிநேரம் அவரை நிலைநிறுத்தினர்.
மறுவாழ்வு
மாற்று அறுவை சிகிச்சையும் மீண்டு வந்த வாழ்வும்
இந்த 48 மணிநேர அவகாசத்தில், நோயாளியின் உடலில் இருந்த தொற்று நீங்கியதுடன், ரத்த அழுத்தம் சீரானது. அதே நேரத்தில் சரியான கொடையாளரிடமிருந்து நுரையீரலும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்த நோயாளி தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும், சீரான சுவாசத்துடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. "பொதுவாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நீண்ட கால நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். ஆனால், தீவிர சுவாசக் கோளாறு உள்ள இளைஞர்களைக் காப்பாற்ற இது ஒரு சிறந்த வழி என்பதை இது நிரூபித்துள்ளது." என்று டாக்டர் அங்கித் பாரத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.