LOADING...
சாட்ஜிபிடியை விட பவர்ஃபுல்! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளர்; ஓபன்ஏஐயின் புதிய North Star திட்டம்
மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளரை உருவாக்குகிறது ஓபன்ஏஐ

சாட்ஜிபிடியை விட பவர்ஃபுல்! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளர்; ஓபன்ஏஐயின் புதிய North Star திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓபன்ஏஐ நிறுவனம், இப்போது அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. வெறும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சாட்பாட்களைத் தாண்டி, மனித ஆராய்ச்சியாளர்களைப் போலவே சுயமாகத் திட்டமிட்டு, ஆய்வு செய்து, சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு காணும் "தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளரை" (Fully Automated AI Researcher) உருவாக்குவதே தங்களின் அடுத்த சில ஆண்டுகளுக்கான இலக்கு என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

திட்டம்

இது என்ன திட்டம்?

ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜக்குப் பச்சோக்கி இந்தத் திட்டத்தை நிறுவனத்தின் "North Star" என்று அழைக்கிறார். அதாவது, இனிவரும் காலங்களில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இந்த ஒரு இலக்கை நோக்கியே அமையும்.

செயல்பாடு

இந்த ஏஐ ஆராய்ச்சியாளர் என்ன செய்யும்?

தற்போதுள்ள ஏஐக்கள் நாம் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றன. ஆனால், இந்த புதிய சிஸ்டம் ஒரு பெரிய சிக்கலைத் தீர்க்கத் தேவையான வேலைகளை அதுவே திட்டமிடும். ஒரு ப்ராம்ட்டிற்கு பதில் அளிப்பதோடு நிற்காமல், மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் ஒரு குறிப்பிட்ட சிக்கலில் தொடர்ந்து ஆய்வு செய்யும். புதிய யோசனைகளைத் தானே உருவாக்கி, அவற்றைச் சோதனை செய்து, தகவல்களை ஆய்வு செய்யும். கணிதம், இயற்பியல் மற்றும் உயிர் அறிவியல் போன்ற துறைகளில் மனிதத் தலையீடு இன்றியே பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

Advertisement

முதல் படி

ஏஐ ஆராய்ச்சி இன்டர்ன்

இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, ஒரு மனித ஆராய்ச்சியாளருக்கு உதவியாக இருக்கும் ஏஐ ஆராய்ச்சி இன்டர்ன் என்ற ஏஜென்ட்டை ஓபன்ஏஐ உருவாக்கி வருகிறது. ஒரு மனிதன் பல நாட்கள் செய்ய வேண்டிய சிறிய ஆராய்ச்சிப் பணிகளை இது சில மணிநேரங்களில் முடித்துவிடும். காலப்போக்கில், பல ஏஐ ஏஜென்ட்கள் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய புராஜெக்ட்களைக் கையாளும் 'மல்டி-ஏஜென்ட் சிஸ்டம்' உருவாக்கப்படும்.

Advertisement

அச்சம்

எழும் அச்சங்களும் சவால்களும்

சுயமாகச் செயல்படும் ஒரு கருவி என்பது எவ்வளவு நன்மையோ, அவ்வளவு ஆபத்தும் கொண்டது. மனிதக் கண்காணிப்பு இல்லாமல் நீண்ட நேரம் செயல்படும்போது தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இந்தத் தொழில்நுட்பம் தவறான கைகளில் கிடைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனைத் தவிர்க்க, ஏஐ எவ்வாறு சிந்திக்கிறது என்பதைக் கண்காணிக்கவும், மிகவும் சக்திவாய்ந்த கருவிகளைக் கட்டுப்பாடான சூழலில் வைத்துப் பயன்படுத்தவும் ஓபன்ஏஐ திட்டமிட்டுள்ளது.

எதிர்காலம்

போட்டி மற்றும் எதிர்காலம்

கூகுள் டீப்மைண்ட் மற்றும் ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற சுயமாகச் சிந்திக்கும் ஏஐ ஏஜென்ட்களை உருவாக்கி வருகின்றன. முழுமையான மனித அறிவாற்றல் (AGI) கொண்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குவது இன்னும் வெகுதூரத்தில் இருந்தாலும், இந்தத் தானியங்கி ஏஐ ஏஜென்ட்கள் தொழில்நுட்பம் மற்றும் வணிக உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement