'பெற்றோரை விட உயர்பதவி பெரிதல்ல!' மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவு துணைத் தலைவர் கேசவன் சண்முகம் ஓய்வு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சி நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த பொறியியல் துணைத் தலைவர் கேசவன் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 23 ஆண்டுகள் நீடித்த வெற்றிகரமான கார்ப்பரேட் வாழ்க்கையை விடுத்து, இந்தியாவில் உள்ள தனது வயதான பெற்றோருடன் நேரத்தை செலவிட அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கேசவன் உருக்கம்
சரியான முன்னுரிமையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கேசவன் உருக்கம்
தனது லிங்க்ட்இன் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள கேசவன், "மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்தியாவில் உள்ள எனது பெற்றோரைக் கவனிப்பதற்காக இன்று ஓய்வு பெறுகிறேன்.
எக்செல் கோபைலட் போன்ற அற்புதமான திட்டங்களையும் திறமையான ஊழியர்களையும் விட்டு விலகுவது கடினமான ஒன்று தான்.
இருப்பினும் எனது ஆற்றலையும் நேரத்தையும் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு வழங்குவதே சரியான சமரசமாகும்." என்று தெரிவித்துள்ளார்.
ஊகங்கள்
இணையவாசிகளின் பாராட்டுகளும் குடியேற்ற விதி ஊகங்களும்
தொழில்நுட்பத் துறையின் உச்சத்தில் இருக்கும் போது, குடும்பத்திற்கு முதலிடம் கொடுத்த அவரது முடிவை ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்களும் இணையவாசிகளும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கிரீன் கார்டு மற்றும் எச்-1பி விசா விதிகளில் கொண்டு வந்த தற்காலிகத் தடைகளே இவரது இந்த முடிவுக்குக் காரணமா என இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.
ஆனால், கேசவன் தனது பதிவில் இது முழுக்க முழுக்கத் தனது குடும்பம் சார்ந்த தனிப்பட்ட முடிவு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்களின் அதிகரித்து வரும் தாயகக் கனவு
கேசவன் சண்முகத்தின் இந்த முடிவு, வெளிநாடுகளில் உயர்பதவிகளில் இருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனத்தின் பொறியியல் தலைவர் பாலாஜி குருராஜன், 18 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த பிறகு பெங்களூரு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தொழில் வாழ்க்கையின் வெற்றியை விட, வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்த்துக்கொள்வதே உண்மையான வெற்றி என்பதை இவர்களின் முடிவுகள் உணர்த்துகின்றன.