AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி-யை இணைய உலகில் அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சில மாதங்களிலேயே உலக அளவில் வைரலானது சாட்ஜிபிடி. AI குறித்து தெரியாதவர்கள் கூட சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத்த தொடங்கினார்கள். இந்த AI போட்டியில் விரைவாக இணைந்து கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கடந்த ஜனவரி மாதம் கைகோர்த்து, AI-யில் இனி வரும் ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. ஓபன்ஏஐ-யுடன் கைகோர்த்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பிங் தேடுபொறியிலும் AI-ஐ அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட். சட்டென விழித்துக் கொண்ட கூகுள், தங்கள் பார்டு AI சாட்பாட்டைக் களத்தில் இறக்கியது. ஆனாலும் அந்த நகர்வு கூகுளுக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கவில்லை. இந்த AI போட்டியில் முந்துகிறதா மைக்ரோசாஃப்ட்?
முன்னணியில் மைக்ரோசாஃப்ட்:
அடுத்த காலாண்டில் மைக்ரோசாஃப்டின் கிளவுடு டிவிஷனான அசூரின் வருவாய் 26% முதல் 27% வரை உயரும் எனவும், அதின் மைக்ரோசாஃப்டின் AI சேவைகள் முக்கிய பங்கு வகித்திருக்கும், எனவும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஏமி ஹூடு தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடியைப் போல வெறும் டெக்ஸ்ட் சேவையை மட்டும் வழங்காமல் டால்.இ. வசதியையும் சேர்த்து டெக்ஸ்ட்-டூ-இமேஜ் வசதியையும் சேர்த்து பிங்கின் AI சேவையில் வழங்குகிறது மைக்ரோசாஃப்ட். உலகின் முன்னணி மின்சாதன உற்பத்தியாளரான சாம்சங் கூட கூகுள் க்ரோமிற்கு மாற்றாக மைக்ரோசாஃப்டின் புதிய பிங் தேடுபொறியை அடிப்படையான தேடுபொறியாக தங்கள் சாதனங்களில் வழங்குவது குறித்து யோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. எனவே, தற்போதைய நிலையில் இந்த AI போட்டியில் முன்னணியில் இருப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தான்.