LOADING...
இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்
இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை விதிக்கலாம் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
03:45 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். பிரான்சில் ஏற்கனவே இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியும் இது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். "குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் ஒழுங்குமுறை நடவடிக்கை அல்ல, அது ஒரு நாகரிகம்" என்று அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

பாராட்டு

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு பாராட்டு

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் கடந்த பத்தாண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை மேக்ரான் வெகுவாகப் பாராட்டினார். 140 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கியது உலகிலேயே வேறு எந்த நாட்டாலும் முடியாத ஒரு சாதனை என்று அவர் புகழாரம் சூட்டினார். "மும்பையில் உள்ள ஒரு தெருவோர வியாபாரியின் கதையை நான் கேள்விப்பட்டேன். 140 கோடி மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் சொன்னதை இந்தியா பொய்யாக்கி காட்டியுள்ளது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தியா

இந்தியா ஸ்டாக் (India Stack) - உலகிற்கே ஒரு பாடம்

இந்தியாவின் தனித்துவமான தொழில்நுட்பக் கட்டமைப்புகளான 'இந்தியா ஸ்டாக்' குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விரிவாகப் பேசினார்: யுபிஐ: மாதம் 2,000 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகளைச் செய்யும் இந்தியாவின் கட்டண முறையை அவர் வியந்து பாராட்டினார். சுகாதார அடையாள அட்டைகள்: 50 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் ஹெல்த் ஐடிகளை உருவாக்கியுள்ள உள்கட்டமைப்பை அவர் சுட்டிக்காட்டினார். இந்த கண்டுபிடிப்புகள் ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

கூட்டு முயற்சி

ஏஐயின் எதிர்காலம் மற்றும் கூட்டு முயற்சி

செயற்கை நுண்ணறிவு என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமேயான விளையாட்டு அல்ல என்று குறிப்பிட்ட மேக்ரான், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து புதுமை மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் என்று உறுதி அளித்தார். தொழில்நுட்பத்தையும் மனிதாபிமானத்தையும் இணைப்பவர்களே ஏஐயின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள் என்றும், இந்த உச்சிமாநாட்டின் மூன்று சூத்திரங்களான 'மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்' இதற்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

Advertisement