ஒரு AI Prompt-க்கு பின்னால் இவ்வளவு தண்ணீரா? 610 கோடி கேலன் தண்ணீர் காலி
செய்தி முன்னோட்டம்
நாம் ஒரு ஏஐ தேடலை மேற்கொள்ளும்போதோ அல்லது ஒரு புகைப்படத்தை உருவாக்கும்போதோ, அதன் பின்னால் இருக்கும் சர்வர்கள் வெளியிடும் வெப்பத்தை தணிக்க டன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது. கூகுளின் 2024 சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் தரவு மையங்கள் 610 கோடி கேலன் நன்னீரை நுகர்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 17% அதிகம். கணினிகள் வேலை செய்யும்போது அதிகப்படியான வெப்பத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக ஏஐ செயலிகள் இயங்கும் ஆயிரக்கணக்கான பிராசஸர்கள் உருகாமல் இருக்க, Cooling Towers பயன்படுத்தப்படுகின்றன. வெப்பமான மேற்பரப்புகளில் தண்ணீரை பாய்ச்சி வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பயன்படுத்தப்படும் தண்ணீரில் 80% நீராவியாக காற்றில் கரைந்து விடுகிறது.
தண்ணீர்
ஏன் நன்னீர் (Fresh Water) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது?
நீராவியாக மாறும் தண்ணீரை மீண்டும் குழாய்களுக்குக் கொண்டு வர முடியாது என்பதால், அந்தத் தண்ணீர் உள்ளூர் நீர் சுழற்சியிலிருந்து முற்றிலும் விடுபடுகிறது. சாக்கடை நீர் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்தினால் அதிலுள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இயந்திரங்களில் உப்புப் படிவங்களை உருவாக்குகின்றன. இது பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெப்ப பரிமாற்றிகளை சேதப்படுத்தும் என்பதால், நிறுவனங்கள் நகராட்சி வழங்கும் தூய நன்னீரை பயன்படுத்தவே முன்னுரிமை அளிக்கின்றன.
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எதிர்காலம்
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையின்படி, 2028-ஆம் ஆண்டிற்குள் ஏஐ தரவு மையங்களின் தண்ணீர் தேவை 11 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு தரவு மையம் சராசரியாக 50,000 பேர் பயன்படுத்தும் தண்ணீரை உறிஞ்சுகிறது. இது ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது. ஏஐ தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதன் வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.